1066
EN

மெலடோனின் என்றால் என்ன? மெலடோனின் எடுத்துக் கொள்ளச் சரியான வழி என்ன?

18 February, 2025

மெலடோனின் குறித்த கண்ணோட்டம்

மெலடோனின் இயற்கையாக நமது உடலில் சுரக்கும் சுரப்பி ஆகும். இது உறக்கம் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு ‘உறக்கத்தைத் தூண்டும் சுரப்பி ஆகும். இயற்கையான உறக்கச் சுழற்சியை ஒழுங்காக அமைப்பதற்காக உடலின் சர்க்காடியன் இசைவைச் (Circadian rhythm) சீராக்க இது உதவுகிறது. மெலடோனின் மூளையில் உள்ள பினியல் சுரப்பியின் சுரப்பு ஆகும்.

உறக்கம் மற்றும் விழிப்புச் சுழற்சியை மேம்படுத்துவதில் மெலடோனின் பங்கு

உறக்கமின்மை (இன்சோம்னியா), தாமதமான மற்றும்/அல்லது போதிய உறக்கமின்மை சிக்கலான பாதகமான உடல் உபாதைகளை விளைவிக்கும் ஒரு உடல் நல சீர்குலைவாகும். உடலின் விழிப்பு-உறக்கச் சுழற்சியை ஒவ்வொரு பகலும் இரவும் ஒழுங்குபடுத்துவதில் மெலடோனின் பெரும் பங்கு வகிக்கிறது. நம் உடலிலுள்ள கடிகாரம் மெலடோனின் சுரப்பை எப்போது மேற்கொள்ள வேண்டும், அதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை மூளைக்குச் சொல்கிறது.

இருளான சூழல் மெலடோனினை அதிகம் உற்பத்தி செய்யத் தூண்டுவதோடு, நம் உடலை உறக்கத்திற்குத் தயார்ப்படுத்துகிறது. ஒளி நிறைந்த சூழல் மெலடோனின் உற்பத்தியைக் குறைப்பதோடு, உங்கள் உடலுக்கு விழித்திருப்பதற்கானச் சமிக்ஞைக் கொடுக்கிறது. சரியாக உறக்கம் வரவில்லை என்றால் மெலடோனின் சுரக்கும் அளவு குறைவாக  இருக்க வாய்ப்புள்ளது. குறை நிரப்பு மருந்துகள் (சப்ளிமெண்ட்) மூலம் உடலில் மெலடோனின் சேர்ப்பது, சரியான உறக்கத்தை அவர்கள் பெற உதவும் என்று நம்பப்படுகிறது.

மெலடோனின் சப்ளிமெண்ட்கள் (குறை நிரப்பு மருந்துகள்)

மனிதர்கள் மட்டுமின்றி பாசி, பூஞ்சை, பூச்சிகள் மற்றும் தாவரங்கள் கூட மெலடோனின் சுரக்கும் திறன் கொண்டவை. காய்கறிகள் மற்றும் பழங்களில் கூட மெலடோனின் உள்ளது. உடலுக்குள் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படும்போது, அது அகதோன்றிய (எண்டோஜெனஸ்) மெலடோனின் என்று அழைக்கப்படுகிறது. செயற்கையாக உற்பத்தி செய்யும்போது, அது புறத்தோன்றிய (எக்ஸோஜெனஸ்) மெலடோனின் எனப்படுகிறது. தற்சமயம், இது மாத்திரைகள், காப்ஸ்யூல்கள் மற்றும் திரவங்கள் போன்ற சப்ளிமெண்ட் (குறை நிரப்பு மருந்துகள்) வடிவில் கிடைக்கிறது.

மெலடோனின் இயற்கையாக நிகழும் சுரப்பி என்பதால், சப்ளிமெண்ட்கள் ஏற்படுத்தும் குறுகிய கால விளைவுகள் சில வகை உறக்கக் கோளாறுகளுக்குத் தீர்வாக உதவும்:

  • ஒழுங்கற்ற உறக்க-விழிப்புச் சுழற்சி
  • தாமதமான உறக்கக் கோளாறுகள்
  • சர்க்காடியன் இசைவுக் கோளாறுகள்
  • விண் பயணக் களைப்பு (ஜெட் லேக்)

மெலடோனின் சரியாகப் பயன்படுத்துவது எப்படி?

  • வேலை, மன அழுத்தம் அல்லது நீண்ட பயணம் காரணமாக, உறக்கம் வரவில்லை எனில் மெலடோனின் சப்ளிமெண்ட்கள் உதவிகரமாக இருக்கும்.
  • நீங்கள் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ள முடிவு செய்தால், கட்டுபாடோடு உபயோகிப்பது மிக முக்கியம், ஒன்று முதல் மூன்று மில்லிகிராம் அளவு மெலடோனின் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.
  • படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அதை எடுத்துக்கொள்வது சிறந்தது. உறக்க நிபுணர்களின் கூற்றுப்படி, உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் மனித உடல் இயற்கையாகவே மெலடோனின் உற்பத்தியைத் துவங்குகிறது.
  • விண் பயணக் களைப்பைத் தடுக்க விரும்புவோர் பயணம் செல்வதற்குச் சில நாட்களுக்கு முன்பிருந்தே அதை எடுக்கத் தொடங்க வேண்டும். முறையாகத் திட்டமிடுதல் அவசியம்.
  • பக்க விளைவுகள் குறித்துக் கவனமாக இருக்கவும். மெலடோனின் சப்ளிமெண்ட்கள் பொதுவாகக் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்றாலும், குமட்டல், தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

எவருக்கு மெலடோனின் பரிந்துரைக்கப்படுவதில்லை?

  1. மனஅழுத்தம் உள்ளோர்: மெலடோனின் மனஅழுத்த அறிகுறிகளை மேலும் மோசமாக்கும்
  2. இரத்தப்போக்கு கோளாறுகள் உள்ளோர்: இரத்தப்போக்கு கோளாறு உள்ளவர்கள் மெலடோனினை எடுத்துக் கொள்வது இரத்தப்போக்கு நிலையை மேலும் மோசமாக்கும்.
  3. நீரிழிவு நோய் கொண்டோர்: நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மெலடோனின் உயர்த்தும். நீங்களோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களோ நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்து மெலடோனினும் எடுத்துக்கொண்டால், இரத்த சர்க்கரை அளவை கவனமாகக் கண்காணித்துக் கொள்ளவும்.
  4. வலிப்புக் கோளாறுகள் உள்ளோர்: மெலடோனின் பயன்படுத்துவது வலிப்பு அபாயத்தை அதிகரிக்கும்
  5. உயர் இரத்த அழுத்தம் கொண்டோர்: இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சில மருந்துகளை உட்கொள்வோர் மெலடோனின் உபயோகித்தால், அதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
  6. மாற்று உறுப்பு பெறுநர்கள்: மெலடோனின் நோயெதிர்ப்புச் செயல்பாட்டை அதிகரிக்கக்கூடும் மற்றும் மாற்று உறுப்பு பெறுவோருக்கு அளிக்கப்படும் நோயெதிர்ப்பைக் குறைக்கும் சிகிச்சையில் குறுக்கிடக்கூடும்.

மெலடோனின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் யாவை?

  • மெலடோனின் சப்ளிமெண்ட் உட்கொண்ட பிறகு குறைந்தபட்சம் 4 மணி நேரத்திற்கு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.
  • பரிந்துரைக்கப்பட்ட பிற மருந்துகள், ஓடிசி மருந்துகள் அல்லது உணவு குறை நிரப்பி மருந்துகளுடன் மெலடோனின் சப்ளிமெண்ட் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • மெலடோனின் எடுத்துக் கொள்ளும்போது மது அருத்துவரை தவிர்க்கவும்.
  • தேநீர், காபி, கோலா மற்றும் பிற காஃபின் கொண்ட பானங்கள் போன்ற பானங்களை அருத்துவரை தவிர்க்கவும். அவை மெலடோனின் நன்மை பயக்கும் விளைவுகளுக்கு எதிராகச் செயல்படும்

மெலடோனின் எடுத்துக் கொள்வதோடு தொடர்புடைய அபாயங்கள் யாவை?

மெலடோனினை குறைந்த அளவில் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றாலும், மெலடோனின் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். மெலடோனின் சார்ந்த மிகவும் பொதுவான ஆபத்துகள் பின்வருமாறு:

  • ஒவ்வாமை எதிர்வினைகள்
  • கர்ப்ப காலத்தில் மற்றும் தாய்ப்பால் அளிக்கும் வேளையில் இதன் பயன்பாடு பாதுகாப்பு நிறைந்ததா என்பது குறித்த தெளிவின்மை
  • இரத்தம் நீர்த்தல்
  • பகல் நேரத்தில், குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு அயர்வை ஏற்படுத்தும்
  • வயது முதிர்ந்தவர்களுக்கு இது ஞாபக சக்தி தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்

பக்க விளைவுகள் உள்ளனவா?

பக்க விளைவுகள் கடுமையாக இல்லாத போதிலும், சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்பவர்கள் கீழுள்ள உபாதைகளில் ஒன்றிரண்டை அனுபவிக்கக் கூடும்:

  • வயிற்றுக்கோளாறு
  • குமட்டல்
  • அயர்வு
  • தவிப்பு
  • கோபம் / எரிச்சல்
  • தலைவலி
  • தலைப் பாரம்
  • பகலில் உறக்கம்
  • குறுகிய கால மனஅழுத்தம்
  • அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்வதால் மனசிதைவு
  • பெண்களில் சூலாக்கச் சுழற்சியில் இடையூறு
  • இயற்கையான சுரப்பி சுரப்பில் சீர்குலைவு
  • குறைந்த இரத்த அழுத்தம்

கட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்தும்போது மெலடோனின் சப்ளிமெண்ட்கள் பொதுவாகப் பாதுகாப்பானவை. சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவருடன் ஆலோசிக்கவும்.

அதிகப்படியான மெலடோனின் உட்கொள்ளலுக்கான சிகிச்சை

அதிக அளவில் மெலடோனினை உட்கொள்ளுவதால் ஏற்படும் விளைவுகளுக்கானச் சிகிச்சைத் திட்டம், அவ்விளைவுகளினால் ஏற்படும் அறிகுறிகளின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். மார்பு வலி அல்லது மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பிற மருத்துவ உதவிகளும் தேவைப்படலாம்.

மருத்துவரை எந்நிலையில் சந்திக்கவேண்டும்?

சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளத் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசியுங்கள். உங்கள் மருத்துவர் சரியான அளவை பரிந்துரைப்பார் மற்றும் அம்மருந்துகளை உட்கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுமா இல்லையா என்பதை உங்களுக்கு விளக்குவார். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் அல்லது திடீரென மார்பு வலி போன்றவை ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

அப்போலோ மருத்துவருடனான சந்திப்புக்கு முன்பதிவு செய்க

முன்பதிவு செய்ய 1860-500-1066-ஐ அழையுங்கள்.

முடிவுரை

மெலடோனின் சப்ளிமெண்ட்கள் பயனுள்ளதாகவும், செயல் திறன் கொண்டதாகவும் இருப்பதாக நீங்கள் உணரலாம். ஆனால் மேலே குறிப்பிட்டுள்ளபடி, பிற உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு அவற்றை அதிகமாக உட்கொள்ளாமல் அளவோடு உட்கொள்வது மிகவும் அவசியம். சரியான நேரத்தில் உறங்குவது சிரமமாக உள்ளது என்பதை உணர்வோர் தங்கள் மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைக்கக்கூடிய பிற மாற்று வழிகளை முயலவும். குழந்தைகளை மெலடோனின் உட்கொள்வதிலிருந்து கண்டிப்பாக விலக்கி வைக்க வேண்டும்.

சப்ளிமெண்ட் எடுக்கத் தொடங்குவதற்கு முன், உங்கள் மருத்துவரை அவசியம் அணுகுங்கள். உங்கள் உடல்நலம், வயது மற்றும் பிற மருத்துவ நிலைமைகளின் அடிப்படையில் உறக்கம் சார்ந்த உங்கள் பிரச்சினைகளுக்குச் சிறந்த தீர்வை அவர்கள் பரிந்துரைப்பார்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. மெலடோனின் எஃப்.டி.வால் அங்கீகரிக்கப்பட்டதா?

இல்லை. உணவு மற்றும் மருந்து நிர்வாக (எஃப்.டி.ஏ) நிறுவனம் மெலடோனின்-ஐ உணவு சப்ளிமெண்டாகவே விவரிக்கிறது. வைட்டமின்கள், தாதுக்கள், மூலிகைகள், அமினோ அமிலங்கள் மற்றும் பிற உணவு ஊட்டச்சத்துப் பொருட்கள் உணவு சப்ளிமெண்ட்களில் அடங்கும். எனவே, அது உட்கொள்ளப் பாதுகாப்பானது அல்லது அதன் செயல்திறன் குறித்து எஃப்.டி.ஏ அங்கீகரிக்கவில்லை.

2. நான் ஒரு டோஸ் தவறவிட்டால் என்ன ஆகும்?

அதைப் பற்றிக் கவலைப்பட அவசியமில்லை. சில நேரங்களில், தலை சுற்றுவது போன்று உணரக் கூடும். மருந்து எடுத்துக் கொள்ளாதது நினைவுக்கு வந்த உடன் ஒரு டோஸ் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒன்றைத் தவறவிட்டால் அடுத்தமுறை அளவை இரட்டிப்பாக்க வேண்டாம்.

3. குழந்தைகளுக்கு மெலடோனின் சப்ளிமெண்ட்ஸ் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா?

மெலடோனின் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வதால் அயர்வு, தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய பக்க விளைவுகள் ஏற்படுவது பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பொதுவாக ஏற்படும் ஒன்றாகும்.

Could not find what you are looking for? 

Request a Callback

Image
Image
Request A Call Back
Request Type
Image
Doctor
Book Appointment
Book Appt.
View Book Appointment
Image
Hospitals
Find Hospital
Hospitals
View Find Hospital
Image
health-checkup
Book Health Checkup
Health Checkup
View Book Health Checkup
Image
Doctor
Book Appointment
Book Appt.
View Book Appointment
Image
Hospitals
Find Hospital
Hospitals
View Find Hospital
Image
health-checkup
Book Health Checkup
Health Checkup
View Book Health Checkup